பெண்கள் நலனுக்கானது திராவிட மாடல் ஆட்சி அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம் திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் வளைகாப்பு விழா

திருவண்ணாமலை, டிச.17: பெண்கள் நலனுக்கானது திராவிட மாடல் ஆட்சி என திருவண்ணாமலையில் தூய்மைஅருணை அமைப்பு சார்பில் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் இரா.ராஜேந்திரன் பெருமிதம் தெரிவித்தார். திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, மாதந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவை கடந்த 6 மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மாதந்தோறும் வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள நகர்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில், தூய்மை அருணை அமைப்பு சார்பில், கர்ப்பிணிளுக்கு வளைகாப்பு விழா நேற்று நடந்தது. அருணை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குணசிங் தலைமை தாங்கினார். அருணை கல்விக்குழுமங்களின் துணைத்தலைவர் எ.வ.குமரன், அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிஇஒ பேராசிரியர் அசோக் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில், கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தி பேசினார். மேலும் தூய்மை அருணை மேற்பார்வையாளர் ப.கார்த்திவேல்மாறன் தொகுத்து வழங்கினார். மகப்பேறு சிறப்பு மருத்துவர் விஷ்ணுபிரியா மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு பட்டுச்சேலை, இனிப்புகள், தின்பண்டங்கள் மற்றும் மங்கலப்பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகங்களை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் பேசியதாவது: திருவண்ணாமலை ஆன்மீக நகரம். பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஆன்மீகத்தை நாடி பலர் இங்கு வருகின்றனர். இந்த நகரம் தூய்மையாகவும், பசுமையாகவும் விளங்கிட பொதுப்பணித்துறை அமைச்சர் கடந்த 2017ம் ஆண்டு தூய்மை அருணை அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு தூய்மைப்பணியோடு மரம் வளர்த்தல், பராமரித்தல் மற்றும் மருத்துவ முகாம் நடத்துதல் என சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, தூய்மை அருணையின் மகுடமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கெல்லாம் காரணம் அமைச்சர் எ.வ.வேலு. அவர் உழைப்பால் உயர்ந்தவர். சாதனை முதல்வரின் அன்பை பெற்றவர். அவர், எங்களுக்கெல்லாம் ரோல்மாடலாக இருப்பவர். முதல்வர் ஆணையிட்டால் ஓய்வில்லாமல் அசுரத்தனமாக செயல்படக்கூடியவர். பிரதிபலன் பார்க்காமல் சமூக தொண்டாற்றி வருபவர். பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது மறுபிறப்பாகும். அவர்கள் மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடு விளங்க, கணவரும், உறவினர்களும் சிறப்பாக பராமரிக்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல், சுகப்பிரசவம் அமைய வேண்டுமென முதல்வர் பலதிட்டங்களை செயல்படுத்துகிறார். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடைய கல்வி நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நடத்துகிறார்.

அதனால்தான், இந்த பகுதியில் அதிகமானோர் கல்வி பயின்று உயர்ந்த நிலையில் உள்ளனர். குடும்பத்தை, சமூகத்தை உயர்த்தும் பெண்கள் நலனுக்கான ஆட்சியைச் செய்து வரும் திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை அனைவரும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், பகுதி செயலாளர்கள் குட்டி க.புகழேந்தி, சி.சண்முகம், டிவிஎம் நேரு, ஏ.ஏஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள் சி.என்.அண்ணாதுரை, இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏ மு.பெ.கிரி, பிரியா விஜயரங்கன், இல.குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: