அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம்

டெல்லி: அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன், வி.கே.சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர், வி.கே.சக்சேனாவுக்கு எதிராக பேசியதோடு, அவதூறு முகாந்திரத்துக்கான கருத்துக்களையும் முன்வைத்ததாக மேதா பட்கருக்கு எதிராக சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

2001-ம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவராக வி.கே.சக்சேனா இருந்தபோது, அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இவர் தற்போது டெல்லி துணைநிலை ஆளுநராக பதவி வகித்துவருகிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என கடந்த மே 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன், வி.கே.சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, மேதா பட்கருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அதிக தண்டனை விதிக்கவில்லை என நீதிபதி கூறினார்.

மேதா பட்கர் – வி.கே.சக்சேனா இடையே 2000-ம் ஆண்டு முதல் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கரும் வழக்குகளை தொடர்ந்துள்ளார். வி.கே.சக்சேனா அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நேஷனல் கவுன்சில் ஃபார் சிவில் லிபர்டீஸ் என்ற என்.ஜி.ஓ அமைப்பின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: