தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, கிண்டியில் TN-RISE – தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்து, TN-RISE இலட்சினையை (Logo) வெளியிட்டு, TN-RISE இணையதளத்தை துவக்கி வைத்தார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு. இன்று, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இச்சிறப்புமிகு நிறுவனத்தின் துணை நிறுவனமான வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டம் (ஊரகப் புத்தாக்கத் திட்டம்) ஊரகப் பகுதிகளில் கிராமப்புறத் தொழில்களை ஊக்குவித்தல், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், மகளிர் தொழில் முனைவோர் மூலம் கிராமப்புறங்களில் தொழில் உருவாக்குதல் ஆகியவற்றை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

பெண் தொழில் முனைவோர், நிதி, சந்தைகள், தொழில் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை எளிதாக பெறுவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. “மகளிர் தொழில் முனைவோர் இந்த சவால்களை எதிர்கொள்ள, அவர்களுக்கென பிரத்யேக “புத்தொழில் இயக்கம்” ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கும் எனவும், இந்த இயக்கம் மகளிர் தொழில் முனைவோருக்கு அவர்களின் தொழில் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் தேவையான மேம்பட்ட உதவிகளை வழங்கும்” எனவும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (02.07.2024) சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் TN-RISE தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்து, TN-RISE திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து TN-RISE இலட்சினையை (Logo) வெளியிட்டு, இணையதளத்தையும் (www.tnrise.co.in) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் கலைநயத்துடன் மகளிர் தொழில்
முனைவோருக்கு தேவையான பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், தற்போதுள்ள தொழில் காப்பு மையங்களை (Business Incubation Centers) எளிதில் அணுக இயலாத ஊரக, நகர்ப்புர மகளிர் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் நிலை சேவைகளை வழங்குவதன் மூலம் மாநிலத்தின் தொழில் வணிக சூழலில் மகளிர் தொழில் முனைவோருக்கும் மற்ற தொழில் முனைவோருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் செயல்படும்.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மகளிர் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் தொழில் குழுக்கள் இம்மையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயன் பெற இருக்கின்றனர். மேலும் இத்தகைய தொழில் முனைவோருக்கு வழிகாட்டவும், தேவையான சேவைகளை வழங்கவும் தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்ற Flipkart, HP. SICCI, StartupTN மற்றும் பல நிறுவனங்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் இன்றைய தினம் TN-RISE நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் / வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்கு அலுவலர் திருமதி ஸ்ரேயா பி.சிங், சமிக் சுந்தர் தாஸ் (Task Team Leader. The World Bank), முதன்மைச் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: