ஆந்திராவில் இன்று தொடங்கியது; முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை: வீடுகளுக்கே சென்று முதல்வர் வழங்கினார்

திருமலை: ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபுநாயுடு இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார். ஆந்திராவில் மூத்த குடிமக்கள், விதவைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி முந்தைய அரசில் மூத்த குடிமக்கள், விதவைகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரத்தை ‘என்டிஆர் பரோசா’ திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சந்திரபாபுநாயுடு அறிவித்திருந்தார். அதன்படி உயர்த்தப்பட்ட உதவிதொகை வழங்கும் திட்டம் இன்று காலை தொடங்கியது. உயர்த்தப்பட்ட கூடுதல் தொகையான ரூ.1000த்தை தேர்தல் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 3 மாதத்திற்கான ரூ.3 ஆயிரம் நிலுவைத்தொகை மற்றும் இந்த மாதத்திற்கான (ஜூலை) ரூ.4 ஆயிரம் என மொத்தம் ரூ.7 ஆயிரம் வழங்கும் பணியும் தொடங்கியது. இதையொட்டி குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதிக்கு உட்பட்ட பெனுமகாவில், முதல்வர் சந்திரபாபுநாயுடு இன்று பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவி தொகை வழங்கினார்.

பனாவத் பாமுலா நாயக் என்பவரின் குடிசைக்கு சென்ற முதல்வர் சந்திரபாபு, முதியோர் ஓய்வூதியம் மற்றும் அவரது மகளுக்கு விதவை தொகையையும் வழங்கினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் உரையாடினார். அவர்கள் கொடுத்த காபியையும் குடித்தார். பனாவத் நாயக், வீடு இல்லாமல் இருப்பதாகவும், வீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வீடு வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். அப்போது அமைச்சரும், அந்த தொகுதி எம்எல்ஏவுமான நாராலோகேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் சந்திரபாபுநாயுடு அதிகாலை 5.45 மணிக்கு உண்டவல்லி இல்லத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு பெனுமகா கிராமத்துக்கு சென்றார். காலை 6 மணி முதல் 6.20 மணி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவித்தொகை வழங்கினார். பின்னர் பெனுமாகாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு உரையாடினார். பின்னர் முதல்வர் சந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு முதல்வர் எவ்வாறு இருக்கக்கூடாது என்பது கடந்த ஆட்சியில் இருப்பவர்கள் உணர்த்தினர்.

இதனால் அவரை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். ஆனால் நல்ல முதல்வராக எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஏற்ப நான் இருக்கவேண்டும். அதற்கு ஏற்ப நான் எனது பணியை செய்வேன். ஆந்திர மாநிலத்தின் கனவு திட்டமான அமராவதி தலைநகர், போலாவரம் அணைக்கட்டு திட்டத்தை எனது 2 கண்களாக எண்ணி அதனை முடிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் எவ்வளவு கடன் உள்ளது. கஜானாவில் எவ்வளவு பணம் உள்ளது என இதுவரை நான் பார்க்கவில்லை. இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என உயர்த்தப்பட்ட உதவிதொகை வழங்கப்படுகிறது.எனது கனவு ஏழைகள் இல்லாத மாநிலமாக ஆந்திராவை மாற்றவேண்டும். அதற்கு ஏழைகளின் வருமானத்தை உயர்த்தவேண்டும். இதுவே எனது லட்சியம். உதவித்தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தியதால் இந்த அரசுக்கு ரூ.819 கோடி கூடுதல் சுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆந்திராவில் முதியோர் உதவிதொகை, விதவை உதவி தொகை, நோயாளிகளுக்கு உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை என 28 வகைகளிலும் 65 லட்சத்து 18 ஆயிரத்து 496 பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவிதொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post ஆந்திராவில் இன்று தொடங்கியது; முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை: வீடுகளுக்கே சென்று முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: