50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்துவதற்கு புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் இயற்ற காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை உயர்த்துவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் அரசு பணிகள், கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தி அம்மாநில அரசின் உத்தரவை சமீபத்தில் பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனால், இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் பீகார் மாநில இடஒதுக்கீடு சட்டத்தை அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் ஒன்றிய அரசு சேர்க்க வேண்டுமென பாஜவின் கூட்டணி கட்சியும் ஆளுங்கட்சியுமான ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நேற்று முன்தினம் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘தமிழ்நாட்டில் கடந்த 1994ல் செய்யப்பட்டதைப் போல, இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து மாநில சட்டங்களையும் 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டுமென பல்வேறு எதிர்க்கட்சிகள் கேட்டு வருகின்றன. தற்போது இந்த விஷயத்தில் பாஜவின் கூட்டணியே கட்சியே வலியுறுத்தியிருப்பது நல்லது. ஆனாலும் பாஜ மவுனம் காக்கிறது. எப்படியிருந்தாலும் இந்த விவகாரம் நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்பட்டது.

எனவே இடஒதுக்கீடு தொடர்பாக அரசியலமைப்பில் திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே தீர்வு காண முடியும். இது மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரசின் முக்கிய உத்தரவாதங்களில் ஒன்று. இந்த விஷயத்தில் பிரதமர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவாரா? நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் அத்தகைய மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post 50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்துவதற்கு புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் இயற்ற காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: