ஜனநாயகம், அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘ஜனநாயகம், அரசியலமைப்பு மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார். மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கடந்த 4 மாதத்திற்குப் பிறகு அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி நேற்று மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களிடையே, என் குடும்பத்தாரிடையே வந்திருக்கிறேன். நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நாட்டு மக்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024 மக்களவை தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தல். உலகின் எந்த நாட்டிலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதில் 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள்.

இதற்காக, தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலுடன் தொடர்புடைய அத்தனை பேருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவான அன்னையருக்காக இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று சிறந்த இயக்கம் ஒன்றை ஆரம்பித்தேன். அது, ஒரு மரம் அன்னையின் பெயரில்.

நானும் கூட என் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டிருக்கிறேன். அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டு அதன் புகைப்படங்களை #Plant4Mother என்கிற ஹேஷ்டேக்கில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து மற்றவர்களுக்கும் ஊக்கமளித்து வருகிறார்கள். இந்த இயக்கத்தினால் பூமித்தாயும் நம் தாய்க்கு நிகராக நம்மை கவனித்துக் கொள்கிறாள்.

கேரளாவின் அட்டபாடியில் தயாரிக்கப்படும் கார்த்தும்பிக் குடைகள் இன்று குக்கிராமம் தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகள் வரை தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நமது கொள்கைக்கு இதை விடச் சிறப்பான வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்?

அடுத்த மாதம் இந்த நேரம் பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடங்கப்பட்டிருக்கும். பாரீஸ் ஒலிம்பிக்கில் சில விஷயங்களை நீங்கள் முதன்முறையாகக் காண்பீர்கள். நமது அணியின் வீரர்கள், நாம் முன்பு போட்டியிடாத பிரிவுகளிலும் போட்டிபோட இருக்கிறார்கள். அதே போல ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் கூட அவர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டைப் புரிவார்கள் என்று நாடு முழுவதும் எதிர்பார்க்கிறது. இவ்வாறு கூறினார்.

* மக்கள் பிரச்னைகளை பேசவில்லை: காங்கிரஸ்
பிரதமர் மோடி தனது 3வது பதவிக்காலத்தின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றியதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பவன்கேரா அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய அரசு ஊன்றுகோலுடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலாவது நீட் முறைகேடு, ரயில் விபத்து அல்லது டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது போன்ற தினசரி உள்கட்டமைப்பு சேதங்கள் என மக்களின் அன்றாட பிரச்னைகள் குறித்து ஏன் பிரதமர் பேசவில்லை? கவனத்தை திசை திருப்ப கேரளாவின் குடையைப் பற்றி பேசுகிறார். தேர்தலின் போது, தென் இந்தியாவுக்கு எதிராக வடஇந்தியாவை தூண்டிவிட்டதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?’’ என கேட்டுள்ளார்.

The post ஜனநாயகம், அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: