ஊர்க்காவல் படை வீரர் தேர்வுக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு புதுவை தலைமை செயலகம் முற்றுகை கண்ணீருடன் பெண்கள் சாலை மறியல்

புதுச்சேரி: புதுவையில் ஊர்க்காவல் படை வீரர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு 2 நிமிடம் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து தேர்வர்கள் உப்பளம் அம்பேத்கர் சாலையில் அமர்ந்து கண்ணீருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் 500 ஊர்க்காவல் படை வீரர்கள் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

இதற்காக 12 மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்துக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வர்கள் வர வேண்டும். அதன் பிறகு, நுழைவாயில் மூடப்பட்டு, யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவாயிலை போலீசார் மூடினர். இந்நிலையில் இரண்டு நிமிடம் தாமதமாக காலை 9.32 மணிக்கு வந்த தேர்வர்களை தேர்வறைக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

பாரதிதாசன் மகளிர் கல்லூரி மையத்துக்கு காலதாமதமாக வந்த 3 வாலிபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தங்கள் எதிர்காலமே வீணாகிவிட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இருப்பினும், போலீசார் மனமிறங்கவில்லை. இதேபோல், உப்பளம் இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுத 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலை 9.30 மணிக்கு மேல் வந்தனர். அவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த பெண்களும், அவர்களது பெற்றோரும் எவ்வளோ முறையிட்டும் போலீசார் ஏற்கவில்லை.

இதனால் தேர்வு மைய கேட்டைப்பிடித்துக்கொண்டு அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். அப்போதும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் உப்பளம் அம்பேத்கர் சாலையில் கண்ணீருடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு எஸ்பி லட்சுமி சவுஜன்யா அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். அதனை உயரதிகாரிகளிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், பாதிக்கப்பட்டவர்கள் மனுவாக எழுதி எஸ்பியிடம் கொடுத்தனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக 1 முதல் 5 நிமிடம் வரை காலதாமதமாக வந்த தங்களை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, எங்களுக்கு மறு தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். அதன்பிறகு, தேர்வர்கள் வேதனையுடன் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊர்க்காவல் படை வீரர் தேர்வுக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு புதுவை தலைமை செயலகம் முற்றுகை கண்ணீருடன் பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: