திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

திருச்சி: மக்களுக்கு நம்பகமான உள்ளடக்கத்தை வழங்குவதில் நூலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கற்றல் மற்றும் அறிவைப்பற்றிய செயல்முறையை ஊக்குவிக்கின்றன. புத்தக புழுக்கள் நிறைய புத்தகங்களை படிக்கவும், தங்கள் அறிவை மேம்படுத்தவும் முடியும். மேலும் சந்தையில் கிடைக்காத சிறந்த புத்தகங்களை பெறுவதற்கு நூலகங்கள் மக்களுக்கு உதவுகின்றன. மிக முக்கியமாக நூலகங்கள், முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த தளமாகும். வகுப்பில் வீட்டுப் பாடங்களைப் பெறும்போது, ​​நூலகங்கள் குறிப்புப் பொருட்களுடன் நமக்கு உதவுகின்றன. எனவே மாணவ, மாணவிகள், கல்வியாளர்கள் நலனுக்காக நூலகங்கள் கட்டப்படுகின்றன.

அந்தவகையில், சென்னை கோட்டூர்புரத்தில் 1,200 பேர் அமர்ந்து படிக்கக்கூடிய நூலகத்தை மறைந்த முதல்வர் கலைஞர் கட்டினார். இந்த வரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கடந்தாண்டு ஜூலையில் பிரமாண்ட நூலகம் கட்டி திறந்தார். இந்நிலையில் சென்னை, மதுரையில் உள்ளது போல், திருச்சியிலும் பிரமாண்ட நூலகம் கட்டப்படும் என்று கடந்த 27ம் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு திருச்சி மாவட்ட கல்வியாளர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ரங்கம் அரசு கலை கல்லூரி முதல்வர் லலிதா: திருச்சியில் அமையவுள்ள நூலகம் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்துக்கு உபயோகமாக இருக்கும். அவர்களின் அறிவுத்திறன் மேம்படும். குறிப்பாக ஆராய்ச்சி பணிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த நூலகம் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும். மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத்தரம் முன்னேற பேருதவியாக இருக்கும். திருச்சி மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க செயலாளர் நவீன்: 2வது தலைநகராக உருவாகிக்கொண்டிருக்கும் திருச்சியில் பிரமாண்டமான நூலகம் அமைய இருப்பது திருச்சிக்கு பெருமை சேர்க்கக்கூடியது. முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்க கூடியது.
இதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் மேம்படும். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

திருச்சி ஈவெரா அரசு கல்லூரி தமிழ்துறை இணை பேராசிரியர் சங்கர நாராயணன்: திராவிட மாடல் அரசு உணர்வுபூர்வமாக செயல்படாமல், அறிவுப்பூர்வமாக செயல்படும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த நுலக அறிவிப்பு. இந்த நூலகத்தில் ஆளுமை மிக்கவர்களின் கூட்டம் நடத்துவார்கள். இது அறிவுத்தாகம் மிக்க இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அகில இந்திய குடிமைப்பணி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், கட்டணம் எதுவுமின்றி இங்கேயே தேவையானவற்றை தெரிந்து கொள்ளலாம். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, புதுகை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு இந்த நூலகம் கலங்கரை விளக்கமாக இருக்கும். திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அறிவித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி.

The post திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: