கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

திருமலை: தெலங்கானா அருகே கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர், 15க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத் நகரில் தனியார் கண்ணாடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் கம்ப்ரஷர் வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் விபத்து நடந்த பகுதிக்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 6பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது தெரிய வந்தது. 15க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இதுகுறித்து தகவலறிந்த ஷாத் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 15க்கும் அதிகமான தொழிலாளர்களை மீட்டு உஸ்மானியா மற்றும் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதேபோல் உடல் சிதறி பலியான 6பேரின் சடலங்களை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஷாத் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் ரேவந்த்ரெட்டி இரங்கலை தெரிவித்தார். படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

The post கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: