ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை: வீடுகளுக்கே சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்

திருமலை: ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார். ஆந்திராவில் மூத்த குடிமக்கள், விதவைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி முந்தைய அரசில் மூத்த குடிமக்கள், விதவைகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரத்தை ‘என்டிஆர் பரோசா’ திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சந்திரபாபுநாயுடு அறிவித்திருந்தார்.

அதன்படி உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவிதொகை வழங்கும் திட்டம் நேற்று காலை தொடங்கியது. உயர்த்தப்பட்ட கூடுதல் தொகையான ரூ.1000த்தை தேர்தல் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 3 மாதத்திற்கான ரூ.3 ஆயிரம் நிலுவைத்தொகை மற்றும் ஜூலை மாதத்திற்கான ரூ.4 ஆயிரம் என மொத்தம் ரூ.7 ஆயிரம் வழங்கும் பணியும் தொடங்கியது. இதையொட்டி குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதிக்கு உட்பட்ட பெனுமகாவில், முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்று பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவி தொகை வழங்கினார். பனாவத் பாமுலா நாயக் என்பவரின் குடிசைக்கு சென்ற முதல்வர் சந்திரபாபு, முதியோர் ஓய்வூதியம் மற்றும் அவரது மகளுக்கு விதவை தொகையையும் வழங்கினார்.

பின்னர் அவர்களுடன் அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் உரையாடினார். அவர்கள் கொடுத்த காபியையும் குடித்தார். பனாவத் நாயக், வீடு இல்லாமல் இருப்பதாகவும், வீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வீடு வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். அப்போது அமைச்சரும், அந்த தொகுதி எம்எல்ஏவுமான நாராலோகேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆந்திராவில் முதியோர் உதவிதொகை, விதவை உதவி தொகை, நோயாளிகளுக்கு உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை என 28 வகைகளிலும் 65 லட்சத்து 18 ஆயிரத்து 496 பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை: வீடுகளுக்கே சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: