சிறப்பு வாய்ந்த எண்கண் முருகன் கோயில் தேரோடும் வீதியை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும்

நீடாமங்கலம், ஜூன் 29: கொரடாச்சேரி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் உமாப்பிரியா பாலச்சந்தர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) விஸ்வநாதன் வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்)கண்ணன் படித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு. நாகூரான் (அதிமுக): கீரந்தங்குடியில் மயான சாலை செல்லும் பகுதியில் கல்வெட்டு அமைக்க வேண்டும். கீழப்பாளையூர் பள்ளி அருகில் உள்ள சாலை, ஊர்குடியில் கப்பிச்சாலை போட்டு தர வேண்டும். அபிவிருத்தி ஸ்வரத்தில் வயல் வெளிப்பகுதியில் படித்துறை அமைத்து தர வேண்டும் என்றார்.
சத்தியேந்திரன்(திமுக): சிறப்பு வாய்ந்த எண்கண் முருகன் கோயில் தேரோடும் சாலை 400 மீட்டர் சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும் என்றார்.

ஏசுராஜ்(அதிமுக): வண்டாம்பாளை ஊராட்சியில் தார் சாலை அமைத்ததற்கு நன்றி. வண்டாம் பாளை பகுதியில் வெட்டாற்றில் அல்லி செடிகள் ஆகாய தாமரைச் செடிகள் புதுவிதமான கொடிகள் நிறைய மண்டியுள்ளது. அங்கு உள்ள நூறு ஆண்டுகால பழமையான ரெகுலேட்டர் பாலம் இந்த செடிகளால் அடைபட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் வடிகால் மற்றும் பாசன வசதிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அந்த ஆற்றினை வண்டம்பாளை பகுதியில் தூர் வார வேண்டும். கருணாகரநல்லூரில் வெட்டாற்றில் படித்துறை கட்ட வேண்டும். பொம்ம நத்தத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.

வாசு(திமுக): எனது வார்டில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டது. தண்டலை-அகரத் திருநல்லூர் சாலை சீரமைக்க வேண்டும் என்றார்.
கவிதா(சிபிஐ கட்சி) : அத்திச்சோழமங்கலத்தில் பள்ளி வகுப்பறை பற்றாகுறையாக உள்ளது. எனது பகுதிகளில் வடிகால்களை தூர்வார வேண்டும். கீழதிருமதிகுன்னம்,சிமிழி ஆகிய பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
உமா மகேஸ்வரி(திமுக): தியாகராஜ புரத்தில் படித்துறை கட்ட வேண்டும். தேவர்கண்டநல்லூர்- புலிவலம் சாலை சீரமைக்க வேண்டும். ஓட்ட நாச்சியார்குடி மண் சாலை சீரமைக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணைத் தலைவர் பாலச்சந்தர் பேசியதாவது.

நிதிகளுக்கு ஏற்றவாறு அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது வரப்பட்டுள்ள நிதியை வைத்து ஒவ்வொரு உறுப்பினர்களும் தலா ரூ.10 லட்சத்திற்கான பணிகளை தேர்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும். குறுகிய காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும். மழை காலம் வருவதால் சிறப்பாக பணியாற்ற வேண்டும். குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதிகாரிகள் குடிநீர் டேங்க் மற்றும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் கொரடாச்சேரி ஒன்றியம் பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் வைஷ்ணவி கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ அரசு பொது தேர்வில் 580 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்கு பாராட்டி ரூ.10 ஆயிரம் ரொக்கமும், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி துர்காதேவிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசினையும் தலைவர் உமாபிரியா வழங்கி பாராட்டினர்.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ரவி, ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சசிரேகா, சசிகரன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில் நன்றி கூறினார்.

The post சிறப்பு வாய்ந்த எண்கண் முருகன் கோயில் தேரோடும் வீதியை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: