ஆக்கிரமிப்பில் சிக்கிய பூங்காவை மீட்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு: மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 

மதுரை, ஜூன் 29: மதுரை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பொழிலன் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை கே.கே.நகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான ஏ.ஆர்.சிறுவர் பூங்கா இருக்கிறது. தற்போது பூங்கா முற்றிலும் சேதமடைந்து சிறுவர்கள் விளையாட முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் பூங்காவில் சிலர் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டியுள்ளதுடன், இரவில் முறைகேடான செயல்கள் நடக்கிறது. எனவே ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, மீண்டும் சிறுவர் பூங்காவினை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஏ.ஆர்.சிறுவர் பூங்காவை மதுரை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி சட்டவிரோத கட்டிடங்கள் இருந்தால் அதனை அகற்றவும், விதிமுறைகளை அதிகாரிகள் மீறியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். மேலும், பூங்காவை மீண்டும் பழைய நிலையில் பாதுகாக்க வேண்டும் என்பதுடன், அதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post ஆக்கிரமிப்பில் சிக்கிய பூங்காவை மீட்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு: மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: