தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும், என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது தி.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘‘தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா, இந்த தொகுதியில் உள்ள 7 வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை இருப்பதால் புதிய சேம்பர்கள் அமைத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா,’’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தி.நகரில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த ஒடிசா நிறுவனத்துடன் ஆலோசித்து 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. முத்துரங்கன் சாலை பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே கட்டி கொடுக்கப்படும்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு இந்தாண்டு ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. தி.நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெ.கருணாநிதி எம்எல்ஏ: தி.நகர் கண்ணம்மாப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை உள்ளது. லாரி மூலம் தான் குடிநீர் சப்ளை ஆகிறது. இந்த இடம் கடைசி பாயிண்ட். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தண்ணீர் வரும்போது இங்கு குறைந்து விடுகிறது.  எனவே, இப்பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். தொகுதி முழுவதும் பம்பிங் ஸ்டேசன் சரிவர இயங்காததால் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு: உறுப்பினர் கோரிய இரு பிரச்னைகளையும் உடனே நிறைவேற்றி தரப்படும்.

The post தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.

Related Stories: