கஞ்சா போதையில் மாணவிகளிடம் அத்துமீறல்: ஒருவர் கைது

பூந்தமல்லி: கஞ்சா போதையில் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் இந்திரா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாலிபர்கள் பலர் கஞ்சா போதையில் அவ்வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், பெண்கள் மற்றும் குடியிருப்புவாசிகளிடம் அடிக்கடி வம்பு இழுத்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி மாணவி ஒருவர் இந்திரா நகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை கஞ்சா போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதை ஆசாமிகளை தட்டிக் கேட்டு மாணவியை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை ஆசாமிகள் தட்டிக் கேட்ட நபரின் வீட்டின் அருகே சென்று மிரட்டல் விடுத்து தாக்க முயன்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கஞ்சா போதையில் இருந்த ஒரு நபர் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடிய நிலையில், மற்றொருவரை போலீசார் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர், போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பதும் அவரது கூட்டாளிகள் ஷியாம், தீனா ஆகியோர் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கஞ்சா போதையில் மாணவிகளிடம் அத்துமீறல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: