ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் 5வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பாடாலூர், ஜூன் 27: ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் 5வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 5வது நாளாக நேற்று நடைபெற்றது. ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் சப்-கலெக்டர் கோகுல் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. வருவாய் தாசில்தார் சத்தியமூர்த்தி, சமூக நலப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனிச்செல்வன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த கூத்தூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட தொண்டப்பாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு), ஆதனூர் (தெற்கு) மற்றும் கூடலூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவி தொகை, பட்டா மாற்றம் (முழுபுலம் உட்பிரிவு), குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டம், சாதி சான்றிதழ், இதர மனுக்கள் என மொத்தம் 23 மனுக்கள் வரை பெறப்பட்டது. இதில் 16 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தலைமையிடத்து துணை தாசில்தார் கீதா, மண்டல துணை தாசில்தார் சிரில்சுதன், தேர்தல் துணை தாசில்தார் பெரியண்ணன், வருவாய் ஆய்வாளர் குமாரவேல் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் 5வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: