பூதப்பாண்டியில் காவல் நிலைய ஆவணம் போலியாக தயாரித்த வழக்கில் புரோக்கர் கைது தலைமறைவானவர்களை பிடிக்க 2 தனிப்படை

பூதப்பாண்டி, ஜூன் 27 : பூதப்பாண்டி காவல் நிலைய பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து தாக்கல் செய்த வழக்கில், புரோக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவானவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலம் தொடர்பான பத்திரம் தவறி விட்டது தொடர்பாக, காவல் நிலையங்களில் வழங்குவது போல் போலியாக ஆவணம் தயார் செய்து, பத்திரப்பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலம் ஒன்றின் பத்திரம் தவறி விட்டதாக கூறி, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பெறப்பட்டது போல் போலியாக போலீஸ் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

பூதப்பாண்டி காவல் நிலைய எஸ்.ஐ. லெட்சுமணன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் தென்தாமரைக்குளத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணை அடிப்படையில் மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ராமமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இரு பெண்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை பிடிக்க ஏ.எஸ்.பி. யாங்சென் டோமா பூட்டியா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் நிலைய போலி முத்திரை எப்படி தயாரிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் உள்ள போலீசார் இதற்கு உடந்தையாக இருந்தார்களா? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பூதப்பாண்டி காவல் நிலையம் மட்டுமின்றி குமரி மாவட்டத்தில் உள்ள வேறு சில காவல் நிலையங்களின் போலி முத்திரைகளை பயன்படுத்தி இது போன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட அளவில் இந்த கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

The post பூதப்பாண்டியில் காவல் நிலைய ஆவணம் போலியாக தயாரித்த வழக்கில் புரோக்கர் கைது தலைமறைவானவர்களை பிடிக்க 2 தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: