காருக்குள் கேரள தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை ஆக்கர் வியாபாரியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

களியக்காவிளை, ஜூன் 27: களியக்காவிளை அருகே காருக்குள் கேரள தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆக்கர் கடை உரிமையாளர் சிக்கியுள்ளார். மேலும் இதில் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சாலையோரத்தில் காருக்குள் கடந்த 2 தினங்களுக்கு முன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கைமணம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் தீபு (44) என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடன் காரில் இருந்த மர்ம நபர் தீபுவை கொன்றுவிட்டு ரூ.10 லட்சம் பணம், செல்போன், முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை திருடி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான காட்சிகள் அருகே உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. எனவே அந்த நபரை பிடிக்க எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே தீபுவின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: தீபுவுடன் காரில் வந்த நபர் காரின் பின் இருக்கையில் இருந்துள்ளார். ஒற்றாமரம் பகுதியில் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு, செல்போன் சார்ஜர் மூலம் தீபுவின் கழுத்தை பின்பக்கத்தில் இருந்து இருக்கையோடு சேர்த்தவாறு நெரித்துள்ளார். இதில் துடிதுடித்த தீபு தன்னை விடுவிக்க போராடியிருக்கிறார். ஆனால் பின்னால் இருந்த நபர் பலம் வாய்ந்தவராக இருந்ததால் தீபுவால் தப்பிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த நபர் ஏற்கனவே கொண்டு வந்திருந்த தெர்மாக்கோல் வெட்ட பயன்படுத்தும் சிறிய கத்தியை வைத்து தீபுவின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு காருக்குள் இருந்த பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் 7 தனிப்படையில் 3 குழுவினர் குமரி மாவட்டத்திலும், 4 குழுவினர் கேரளாவுக்கும் பிரிந்து சென்று பல்வேறு இடங்களில் விசாரித்தனர். ஒரு குழுவினர் தீபு குமரி மாவட்டத்தில் எங்கெங்கே? யாரிடமெல்லாம் வியாபார தொடர்பு வைத்துள்ளார்?, காரில் தீபுவுடன் பயணித்த நபர் மார்த்தாண்டத்தில் இருந்து ஏறினாரா? அப்படியென்றால் அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். கேரளா சென்ற மற்றொரு தனிப்படையினர், திருவனந்தபுரம் மலையின்கீழ் பகுதியில் உள்ள தீபுவின் வீட்டின் சுற்று வட்டார பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்பிளி என்ற சதிக்குமார் என்பவரிடம் விசாரித்தனர். இவர் நேமம் பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தீபுவுக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

தீபு கொல்லப்பட்ட நாளில் இரண்டு மூன்று முறை சதிக்குமார் தீபுவிடம் செல்போனில் பேசியுள்ளார். இது தொடர்பாக கேட்டபோது சதிக்குமாரின் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே பணப்பிரச்னையால் தீபுவை அவர் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சதிக்குமார் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தனிப்படை போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து மேல் விசாரணைக்காக, மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று காலை சுமார் 9 மணியளவில் அம்பிளி என்கிற சதிக்குமாரை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். தீபு மலையின்கீழ் பகுதியில் 2 கல்குவாரிகள் நடத்தி வந்த நிலையில் ஆவணம் புதுப்பிக்காததால் 2 கல்குவாரிகளும் மூடப்பட்டன. அவற்றை திறப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் கனிமவளம் சார்ந்த வியாபாரிகளிடம் பேசியுள்ளார். அதில் ஏதும் பிரச்னையா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

₹50 லட்சம் கேட்டு மிரட்டல்
தனிப்படையினர், தீபுவின் மனைவி வேது மோள் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை கூறினார். அதாவது, தீபுவிடம் கடந்த சில நாட்களாக செல்போனில் பேசிய மர்ம நபர் ரூ.50 லட்சம் கேட்டு அடிக்கடி மிரட்டுவார். அந்த நம்பரில் இருந்து போன் வரும்போதெல்லாம் தீபு பயம் கலந்த பரபரப்புடன் இருப்பார். கேட்டால் ஒன்றுமில்லை என்பார். எனவே அந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக வேதுமோள் கூறினார். இதனடிப்படையில் தீபுவுடன் யார் பேசியது? என சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தனிப்படையினர் தகவலை சேகரித்து வருகின்றனர்.

ஜேசிபி வாங்குவதில் கொலையா?
தீபுவுக்கு மாதவ், மானசு என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகனிடம் நடத்திய விசாரணையில், எனது தந்தை தீபு குமரி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் ஜேசிபி இயந்திரம் வாங்குவதற்காக பேசியுள்ளார். இது தொடர்பாக அந்த நபர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். எனவே அந்த நபர் குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

The post காருக்குள் கேரள தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை ஆக்கர் வியாபாரியிடம் தனிப்படை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: