13 முதியோர்களின் பார்வை பறிபோனது: ஒடிசாவில் முதியோர் இல்லத்துக்கு சீல்

அங்கூல்: ஒடிசா மாநிலம் அங்கூல், பனார்பால், அத்தமல்லிக் பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள், அப்பகுதியில் செயல்படும் தனியார் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் சிலருக்கு பார்வை குறைபாடு இருந்ததால், அவர்கள் அங்கூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த ஒரு நாள் கழித்து, அவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக கண் பார்வை இழந்துள்ளது. கிட்டத்தட்ட 13 முதியோர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர். மேலும் 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

பார்வையிழந்த 13 பேரும் வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் அவர்களின் பார்வையை முழுமையாக மீட்டெடுக்க முடியுமா? என்பது கேள்வியாக உள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 11 பேரும் ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதனைக்காக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே முதியோர்களை பராமரித்து வந்த தனியார் முதியோர் இல்லத்திற்கு அங்கூல் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் அப்தால் எம்.அக்தர் உத்தரவிட்டுள்ளார்.

The post 13 முதியோர்களின் பார்வை பறிபோனது: ஒடிசாவில் முதியோர் இல்லத்துக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: