அவை நிகழ்ச்சியிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றார். இதை எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்கவில்லை. ராகுல்காந்தி தொடர்ந்து நீட் முறைகேடு தொடர்பாக பேசியதால் அவையில் அவரது மைக் அணைக்கப்பட்டது. இதனால் பெரும் அமளி ஏற்பட்டது. உடனே அவையை பிற்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். நண்பகல் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும், நீட் மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் அமளி தொடர்ந்தனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தனர்.
‘நாடாளுமன்றத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதற்குக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்று ஓம் பிர்லா கூறினார். அதற்கு,’ இந்த நடைமுறை எல்லாம் மாணவர்களுக்குத் தெரியாது. அவர்கள் நீதியை மட்டும் கோருகிறார்கள்’ என்று காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் கூறினார். மேலும் நீட் முறைகேடு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தை உடனே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மைய பகுதியை முற்றுகையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ,’ ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை அவையில் எடுத்துக்கொள்வதற்கு முன்பு எதிர்க்கட்சிகள் ஒரு பிரச்சினையை விவாதிக்கக் கோருவது இதுவே முதல்முறை. நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது நீங்கள் எழுப்பும் எந்தவொரு பிரச்சினைக்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று எதிர்க்கட்சிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்றார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதை ஏற்கவில்லை.
அப்போது குறுக்கிட்ட ஓம்பிர்லா,’ மக்கள் இந்த அவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களின் பிரச்னைகளை எழுப்பவும், விவாதிக்கவும் முடியும். எனவே அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கக்கூடாது. சாலையில் போராட்டம் நடத்துவதற்கும், சபைக்குள் போராட்டம் நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் (எதிர்க்கட்சி) சபை இயங்குவதை விரும்பவில்லையா? நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது நீட் பற்றி விவாதிக்க விரும்பவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினார்.ஆனாலும் அமளி குறையாததால் சபையை ஜூலை 1ம் தேதி வரை ஒத்திவைத்தார். அமளிக்கு இடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்பி எஸ் கே நூருல் இஸ்லாம் எம்பியாக அவையில் பதவி ஏற்றார்.
மாநிலங்களவை: நீட் பிரச்னை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அவையை நடத்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு 21 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி நீட் பிரச்னை தொடர்பாக நோட்டீஸ் கொடுத்து இருப்பதாகவும் அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதை ஜெகதீப் தன்கர் ஏற்க மறுத்தார். உடனே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து நீட் பிரச்னை பற்றி பேசி, உடனே அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று தன்கரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த தன்கர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்படி பா.ஜ எம்பி சுதன்சு திரிவேதியை அழைத்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் கார்கேயின் மைக் அணைக்கப்பட்டது. இதனால் கடும் அமளி ஏற்பட்டது. கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அவையை பகல் 12 மணி வரை தன்கர் ஒத்திவைத்தார். அதை தொடர்ந்து பகல் 12 மணிக்கு அவை கூடிய போதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது காங்கிரஸ் எம்பி பூலாதேவி நேதம் மயங்கி விழுந்தது குறித்து திருச்சி சிவா எம்பி கேள்வி எழுப்பினார். அதுகுறித்து ஜெகதீப்தன்கர் பதில் அளித்தார்.
மேலும் நீட் பிரச்னையில் தன்கரின் பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்பிக்களும் முதன்முறையாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவையில் நிலவும் சூழ்நிலை குறித்து தன்கர் மீண்டும் வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சபையின் மையப்பகுதிக்கு வந்தது குறித்து தன்கர் வருத்தம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவமுள்ள தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே, அவையின் மையப்பகுதிக்கு வந்து பேசியது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மிகவும் வேதனையான தருணம்’ என்றார். எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளியேறியதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.
மாநிலங்களவையில் நீட் தொடர்பான விவாதம் நடந்து கொண்டு இருந்த போது காங்கிரஸ் எம்பி பூலாதேவி நேதம் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறுகையில்,’ பிற்பகல் 3 மணியளவில், மருத்துவமனையில் இருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. பூலா தேவி நேதம் எம்பி குணமடைந்து வருகிறார். டாக்டர்கள் கூறியுள்ளனர். டாக்டர்கள் கூறியபடி இரண்டு மூன்று மணி நேரம் அங்கு இருப்பார். மாநிலங்களவை அதிகாரிகளும் உள்ளனர். கவலைப்பட ஒன்றுமில்லை’ என்றார்.
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நீட் முறைகேடு குறித்த விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால் அது முறைப்படி நடக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம். ஜனாதிபதி உரையில் நீட் தேர்வு குறித்து பேசியது, எந்த பிரச்னையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்ற அரசின் நோக்கத்தை காட்டுகிறது. நமது நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது அரசிற்கும் பொறுப்பு உள்ளது. அரசு தன் தரப்பு விளக்கத்தை முன்வைக்கத் தயாராக இருக்கும் போது என்ன குழப்பம்? நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறோம். சிபிஐ சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யப் போகிறது. நாங்கள் யாரையும் விடமாட்டோம்.
தேசிய தேர்வு முகமை பொறுப்பில் இருந்தவர்கள் நீக்கப்பட்டு, மூத்த அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசின் உறுதிப்பாட்டிற்குச் சான்று. எனவே மாணவர்களை குழப்பமடைய வைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தேசிய தேர்வு முகமை சீர்திருத்தங்களுக்காக ஒரு நம்பகமான உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட அனைத்து தேர்வுகளின் தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும். எனவே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்துகொள்ளும்படி எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
The post நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.