3 வழக்குகளில் திறம்பட செயல்பட்ட சிபிசிஐடி போலீசார்

கள்ளக்குறிச்சி, ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளி விடுதியில் இருந்த மாணவி மதி உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் கலவரமாக மாறியது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி கோமதி தலைமையிலான குழுவினர் 23 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

தற்போது கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 21 பேரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே 2 சம்பவங்களில் திறம்பட செயல்பட்ட சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி மூன்றாவது சம்பவத்திலும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையே உள்ள பங்காரம் கிராம பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மூன்று மாணவிகள் 2015ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தனர். அந்த வழக்கில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் 3 தனித்தனி சம்பவங்கள் சிபிசிஐடி விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post 3 வழக்குகளில் திறம்பட செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: