மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக நோட்டீஸ்

டெல்லி : 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க கோரி திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு மாற்றாக ‘ வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) ‘ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் விபி ஜி ராம் ஜி என்று பெயரிடப்பட்ட அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விபி ஜி ராம் ஜி மசோதாவில் 100 நாட்களுக்கு பதில் இனிமேல் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்-படி ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு 60% குறைக்கப்படுவதால் மாநிலங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் 88.57 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். 88.57 லட்சம் தொடர்ந்து பயனடைய வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ.4354 கோடியை ஒதுக்க வேண்டும். இதையடுத்து, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: