கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் எதிரொலி தொழிற்சாலைகளில் மது விலக்கு போலீசார் திடீர் ஆய்வு

 

காஞ்சிபுரம், ஜூன் 24: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் எதிரொலியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மதுவிலக்கு பிரிவு போலீசார் மெத்தனாலை முறையாக பயன்படுத்துகிறார்களா என திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மெத்தனாலை முறையாக பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்யுமாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளான ஒரகடம், ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையிலான போலீஸ்சார் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர். தொழிற்சாலை நிர்வாகிகளிடம் மெத்தனாலை என்னென்ன காரணத்துக்கு பயன்படுத்துகிறீர்கள், முறையாக பயன்படுத்துகிறீர்களா, எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், வெளியாட்கள் யாரும் வந்து வாங்கி செல்கிறார்களா, மெத்தனால் இருப்பு விபரம், வாங்கிய இடங்களைப் பற்றிய விவரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

The post கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் எதிரொலி தொழிற்சாலைகளில் மது விலக்கு போலீசார் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: