மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க உயிர் காப்பாளர் நியமனம்: பணி ஆணையினை கலெக்டர் வழங்கினார்

மாமல்லபுரம்: தினகரன் செய்தி எதிரொலியாக மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க உயிர் காப்பாளரை நியமித்து அதற்கான பணி ஆணையை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். மாமல்லபுரம் சர்வதேச அளவில் புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நாள்தோறும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாவாசிகள், வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மாமல்லபுரம் மக்கள் நடமாட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும்.

குறிப்பாக, சனி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு புராதன நினைவுச் சின்னங்களை கூட்டம் கூட்டமாக பார்வையிட வருகை தரும் சுற்றுலாவாசிகள் ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் பொதுமக்கள் திடீரென உருவாகும் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. கடலில் குளிக்கும் பொதுமக்கள் அலையில் சிக்கி பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கடந்த 12ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

கடல் அலையில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு உயிர் காப்பாளரை (லைப் கார்ட்) நியமிக்க வேண்டும், என்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, போர்க்கால அடிப்படையில் உயிர் காப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உயிர் காப்பாளர் (லைப் கார்டாக) நியமனம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜ் (மீனவர்) என்பவருக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் அழைத்து பணி நியமன ஆணையை நேற்று வழங்கினார். இதனை அறிந்த உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலாவாசிகள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், கூடுதலாக உயிர் காப்பாளர்களை நியமிக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க உயிர் காப்பாளர் நியமனம்: பணி ஆணையினை கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: