தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொல்லை நெசவாளர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை திருப்பி செலுத்துமாறு கொடுத்த தொல்லையால், நெசவாளர் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நெசவாளர் மணி (48). இவருக்கு, திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மணிக்கு காலில் காயம் ஏற்பட்டதால், கடந்த ஒரு வருட காலமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு நிதி நிறுவனங்களில் கடனாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு வருட காலமாக வேலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் பல்வேறு நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில், நிதி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் பணத்தை திருப்பி செலுத்துமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த மணி, தற்கொலை செய்வதற்கான காரணத்தை வீடியோ பதிவாக பதிவு செய்துவிட்டு, நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோ காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுப்பது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளதாக வீடியோவில் தற்கொலை செய்து கொண்ட நெசவாளர் மணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொல்லை நெசவாளர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: