அரையப்பாக்கத்தில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

மதுராந்தகம்: தென் மாவட்டங்களுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால், அரையப்பாக்கம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேலவலம் பேட்டை பகுதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரையப்பாக்கம், கீழவலம், பூதூர், ஈசூர், வல்லிபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக திருக்கழுக்குன்றம் வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

இங்கிருந்து மாமல்லபுரம், திருப்போரூர், ஈசிஆர் சாலை எளிதாக செல்ல முடியும்.மேலவலம் பேட்டை – திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் சுற்றுலா பயணிகள் கார், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும், இசிஆர் சாலையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும்போது அதிகளவில் இந்த நெடுஞ்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இந்த நெடுஞ்சாலையில் அரையப்பாக்கம் கிராமம் அருகில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால், இந்த நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.

இதனால், அச்சாலையில் சென்று வரும் வாகன ஓட்டிகள், மூடப்படும் ரயில்வே கேட்டால் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், அப்பகுதி கிராம மக்கள் அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் ரயில் கேட்டு பகுதியை அடைவதற்கு முன்பாக, ஆபத்தான நிலையில் ரயில்வே கேட் கம்பி வழியாக இருசக்கர வாகனத்துடன் குனிந்து நெளிந்து செல்கின்றனர். எனவே, மேலவலம்பேட்டை – திருக்கழுக்குன்றம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அரையப்பாக்கம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரையப்பாக்கத்தில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: