சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருப்போரூர்: கேளம்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஊராட்சியில் கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இவற்றில் ராஜேஸ்வரி நகர், சுசீலா நகர், கிருஷ்ணா நகர், சீனிவாசா நகர், எல்லையம்மன் நகர், ஜோதி நகர், நந்தனார் நகர், கேஎஸ்எஸ் நகர், அஜீத் நகர், சாமுண்டீஸ்வரி நகர், மகாலட்சுமி அவென்யூ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மக்கள் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், நட்சத்திர ஓட்டல்கள், சைவ, அசைவ ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவையும் உள்ளன.

கேளம்பாக்கம் ஊராட்சியில் தினமும் வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் சேரும் குப்பைகளை அகற்ற 2 டிராக்டர்கள், 1 மினி லோடு வேன், 3 பேட்டரி வாகனங்கள் மற்றும் 32 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக கேளம்பாக்கம் பகுதியில் சேரும் குப்பைகளின் அளவு தினமும் அதிகரித்து வருகிறது. மிகச்சிறிய பரப்பளவை கொண்ட ஊராட்சி என்பதால், அரசு புறம்போக்கு நிலங்களின் பரப்புளவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை சேகரித்து வைக்க போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சிவசங்கர் பாபா ஆசிரமம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட 7 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அங்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அருகிலிருந்த குடியிருப்புவாசிகள், நீதிமன்றம் சென்று அந்த இடத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும், அங்கு தரம் பிரித்து உரம் தயாரிக்க கூடாது என்றும் தடை உத்தரவு வாங்கி விட்டனர்.

இதனால், சரியான இடம் இல்லாததால் கோவளம் சாலை, வண்டலூர் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள், லாரிகள் மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை காட்டாங்குளத்தூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சியில் உள்ள குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்துச்செல்லப் படுகின்றன. அங்கு, ஒரு லாரி குப்பைக்கு கட்டணமாக 1500 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. குப்பைகளை எடுக்கவும், கொட்டவும் பயன்படும் பொக்லைன் இயந்திரம், லாரி வாடகை, டிரைவர் கூலி, போக்குவரத்து செலவு என ஒரு லோடு குப்பைக்கு ரூ.10 ஆயிரம் செலவாகிறது. ஒரு வாரம் குப்பைகளை அகற்றாமல்போனால், மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோயும் பரப்புகிறது.

போதிய வருவாய் இன்றியும், போதிய இடம் இன்றியும் கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றவும், அவற்றை மறு சுழற்சி செய்யவும் வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து குப்பைகளை அகற்றுதல் மற்றும் அவற்றை கொளத்தூர் மையத்திற்கு அனுப்பி வைத்தல், போன்ற பணிகளுக்கு மட்டும் ரூ.45 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு இடம் ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே கடனில் இருந்து மீள முடியும் என்றும் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தெரிவித்தார்.

The post சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: