எந்த விசாரணைக்கும் தயார் எக்ஸிட் போலை தடை செய்ய சொல்வது சிறு பிள்ளைத்தனம்: ஆக்ஸிஸ் மை இந்தியா தலைவர் கருத்து

புதுடெல்லி: ‘‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு மூலம் பங்குச்சந்தை முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம்’’ என ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவன தலைவர் பிரதீப் குப்தா கூறி உள்ளார். சமீபத்தில் மக்களவை தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (எக்ஸிட் போல்) பெரும்பாலானவை தோல்வி அடைந்தன. முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸிஸ் மை இந்தியா, பாஜ கூட்டணி 361-401 இடங்களில் வெற்றி பெறும் என கணித்திருந்த நிலையில், பாஜ 293 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு மூலம் பங்குச்சந்தையில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகவும் பங்குகள் விலையை ஏற்றவே இப்படிப்பட்ட கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவன நிகழ்வில் பங்கேற்ற ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறுகையில், ‘‘பங்குச்சந்தையில் நாங்கள் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடர்பாக எந்த ஒரு விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் கருத்துக்கணிப்புகள் அறிவியல்பூர்வமாக இல்லை என்றார்கள், இப்போது தடை செய்யச் சொல்கிறார்கள். கருத்துக்கணிப்புகளை தடை செய்ய சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. இது வெறும் தேர்தல் முடிவை கணிப்பது மட்டுமல்லாமல், தேர்தல் முடிவை அரசியல் கட்சிகள் ஆய்வு செய்யவும் உதவுகிறது. இந்த விஷயத்தில் அரசு முறையான சட்டங்களை வகுத்தால் தேர்தல் கருத்துக்கணிப்புகள் இன்னும் வலுவானதாக மாறும். இதில் விதிமுறைகள் அவசியம் தேவை’’ என்றார்.

* கணிப்பு தவறியது ஏன்?
எக்ஸிட் போலில் கணிப்புகள் தவறியது குறித்து பிரதீப் குப்தா கூறுகையில், ‘‘கடந்த 2019ல் நாங்கள் கணித்தது சரியாக நடந்தது. உபியில் கடந்த 4 தேர்தலில் நாங்கள் கணித்தது மாறவில்லை. இதனால் இம்முறை கொஞ்சம் அசால்டாக இருந்து விட்டோம். இம்முறை ஒடிசாவில் மாற்றம் ஏற்படும் என்பதால் அங்கு அதிக கவனம் செலுத்திவிட்டோம். உபியில் கடைசி 3 கட்ட தேர்தலின் போது, அங்கு களப்பணியில் இருந்த எங்கள் நிபுணர்கள் அனைவரும் ஒடிசாவுக்கு மாற்றப்பட்டனர். இதனால் ஒடிசாவில் சரியாக கணிக்க முடிந்தது. உபியில் கோட்டை விட்டோம். இனி உபி உட்பட எந்த மாநிலத்திலும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துவிட்டோம். இதே போல மேற்கு வங்கம், மகாராஷ்டிராவிலும் சரியாக கணிக்கத் தவறியதால் கணிப்புகள் தோல்வி அடைந்தன’’ என்றார்.

The post எந்த விசாரணைக்கும் தயார் எக்ஸிட் போலை தடை செய்ய சொல்வது சிறு பிள்ளைத்தனம்: ஆக்ஸிஸ் மை இந்தியா தலைவர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: