மீள் குடியேற்றம் செய்யும் வரை மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை மீள்குடியேற்றம் செய்யும் வரை வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாஞ்சோலை பகுதியை சேர்ந்த அமுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் செயல்படும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பிபிடிசி) என்ற நிறுவனம் தேயிலை தோட்டத்தை நடத்தி வருகிறது. இங்கு தங்கியுள்ள நாங்கள் 4 தலைமுறைகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளர்களாக தினக்கூலி அடிப்படையில், சுமார் 700 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,150 தேயிலை தோட்ட தொழிலாளர்களும் 95 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது குழந்தைகள் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். திடீரென அனைவரையும் நிறுவனம் வெளியேற சொல்வது மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது.

எங்களுக்கென வீடோ, இடமோ சொந்தமாக எங்கும் இல்லை. எனவே மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்காக அரசு வழங்கும் பல்வேறு முன்னெடுப்புகளை எங்களுக்கு வழங்கி, மீண்டும் வேறு பணிக்கு திரும்பும் வரை தேவையான நிதி உதவி செய்து, எங்களது வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக சரணாலயத்திற்காக தொழிலாளிகள் வெளியேற்றப்படுவதால் வனத்துறை தரப்பில் உரிய இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்று விசாரித்து, ‘‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு சென்றுள்ளது. மாற்று ஏற்பாடுகள் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா’’ என கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல்கள் லஜபதிராய், வக்கீல் பினேகாஸ் ஆகியோர் ஆஜராகி, ‘‘மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு பட்டா, வீடு, வேலை போன்ற மறுவாழ்வு வசதிகளை செய்து முடிக்கும் வரை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது’’ என்றனர். அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘தேயிலை தோட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள தனியார் நிறுவனம் தான் வெளியேற்றுகிறது. அரசு தரப்பில் வெளியேற்றவில்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு, வாழ்வாதார பாதுகாப்பு எதுவும் செய்யாமல் அவர்களை எப்படி வெளியேற்ற முடியும்? எனவே, மாஞ்சோலை தோட்ட பணியாளர்களை மீள் குடியேற்றம் செய்யும் பணிகள் முடிவடையும் வரை, அங்கிருந்து வெளியேற்ற கூடாது என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

The post மீள் குடியேற்றம் செய்யும் வரை மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: