முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகால ஆட்சியில் இந்திய ஒன்றியத்தில் வளர்ச்சியில் ஓங்கி நிற்கும் தமிழ்நாடு: ஐஐஎம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணெற்ற திட்டங்களை அறிவித்து அதனை திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வராக அரியணை ஏறியதும் உடனடியாக விடியல் பயண திட்டம், கொரோனா நிவாரண உதவித் தொகை ₹4,000 வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்பு திட்டம் ஆகிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டு தனது இன்னிங்ஸ்சை தொடங்கினார். அதனை தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை ₹1000 வழங்கும் திட்டம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயில் பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உயர்த்துதல் என பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முன்னெடுத்து அதனை செயல்படுத்தியும் வருகின்றன.

இதில், முதல்வரின் காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தும் அளவிற்கு பாராட்டை பெற்றுள்ளன. இதுதவிர, தமிழ்நாட்டை அடுத்தக்கட்ட வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி முதலீடுகளை ஈடுக்கும் வண்ணம் மலேசியா, சிங்கப்பூர், ஐப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ₹91.6 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. இந்த மூன்று ஆண்டுகளில் கர்ப்பிணி பெண்கள் சுகாதரம் மற்றும் தேசிய ஏழ்மை குறியீட்டு அறிக்கையில் முதலிடம், நிதி ஆயோக் நிறுவனத்தின் நிலை அறிக்கையில் ஏற்றுமதியில் முதலிடம், தேசிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி – வர்த்தக ஆண்டாய்வு பதிவு அறிக்கையில் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ததில் முதலிடம், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் கடந்த மூன்று ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில் தற்போது இந்திய மேலாண்மை கழகங்கள் (ஐஐஎம்) நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் தயாரான அறிக்கைகளை மையமாக கொண்டு பென் இந்தியா (PEN India) நிறுவனம் தமிழ்நாடு குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 3 ஆண்டுகால தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை 7.21 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு, 13.28 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா மற்றும் 6 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் ஆகிய 3 மாநிலங்களை ஒப்பிட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில், தமிழ்நாடு சமூக வளர்ச்சி குறியீட்டில் முதல் இடத்தையும், தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் முதல் இடத்தையும், நகரமயமாதலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு வரி வருவாய் 3148 பில்லியனாக உள்ள நிலையில், குஜராத்துக்கு 1796 பில்லியன் மட்டுமே வரி வருவாய் கிடைப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ‘இந்தியா ஒன்றியத்திலேயே தமிழ்நாடு தனித்தன்மையுடன் ஓங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகால ஆட்சியில் இந்திய ஒன்றியத்தில் வளர்ச்சியில் ஓங்கி நிற்கும் தமிழ்நாடு: ஐஐஎம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: