கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலையில் அரசு பள்ளியை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: அரசு பள்ளியை ஆக்கிரமித்து ஆட்டோக்களை நிறுத்துவதால் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் முடிவடையும் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலை 18 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.

இருவழிச் சாலையான இந்த சாலையில் சரி வர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. மேலும் கால்வாய் அமைக்காமலும், சாலையை அகலப்படுத்தாமலும் 4 வழிச் சாலையாக ஏனோ தானோவென்று அமைக்கப்பட்டது. மேலும் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை தொடக்கத்திலிருந்து சாலையின் 200 மீட்டர் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நந்திவரம் அரசு பெண்கள் மற்றும் மேல்நிலை பள்ளி ஆகியவை உள்ளன.

இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் சாலை அமைக்கப்பட்டதால் குறுகலான பாதையாகவே காட்சியளித்து வருகிறது. இதனால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே காட்சியளிக்கிறது. இந்நிலையில், சாலையோரத்தில் மசூதியை ஒட்டியபடி உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மணிக் கணக்கில் செய்து நிறுத்தப்படுகிறது. அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பள்ளிக்குச் சென்று வரும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதில் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் சவாரிக்குச் சென்றுவிட்டு வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு வந்து திரும்புவதால் அப்பகுதியில் எந்நேருமும் கடும் போக்குவரத்து நெருசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு, அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர், வெளியூர்களுக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவசர ஆபத்துக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மட்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலையில் அரசு பள்ளியை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: