மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான பெண் வாய்க்காலில் சடலமாக மீட்பு: கட்டுமான நிறுவன வாகனம் மோதி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 16: மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் ஊராட்சி தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி தேன்மொழி (55). விவசாயக் கூலித் தொழிலாளி. கடந்த 13ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற தேன்மொழி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் தேன்மொழி மாயமானது குறித்து மணல்மேடு போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அங்குள்ள தெற்குராஜன் வாய்க்காலில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் தண்ணீர் தேங்கிய பகுதியில் தேன்மொழியின் சடலம் கிடந்தது.

உடனே அவரது உடல் அங்கிருந்து மீட்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தேன்மொழியின் உறவினர்கள், தெற்குராஜன் வாய்க்காலில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் வாகனம் மோதி தேன்மொழி உயிரிழந்ததாகவும், அதனை மறைக்க வாய்க்காலில் தண்ணீர் தேங்கிய பகுதியில் அவரது சடலத்தை தள்ளி விட்டுள்ளதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேன்மொழியின் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி, மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இதனை ஏற்று போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேன்மொழியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. தேன்மொழி இறந்தது தொடர்பாக மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான பெண் வாய்க்காலில் சடலமாக மீட்பு: கட்டுமான நிறுவன வாகனம் மோதி இறந்ததாக உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: