கோயம்பேடு மார்க்கெட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்து பூ விற்ற 5 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அம்பத்தூர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்தமாகவும், சில்லரை விற்பனையிலும் பூக்கள் விற்கப்படுவதால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதன் காரணமாக கோயம்பேடு பூ மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

குறிப்பாக பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகமாக விற்கப்படும் மல்லி, முல்லை, ரோஸ் உள்ளிட்ட பூக்களை பலர் குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்து, புதிதாக விற்பனைக்கு வரும் பூக்களுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை வாங்கிச் சென்று விற்பனை செய்வதற்கு முன்பாகவே பூக்கள் அழுகிவிடுவதாகவும் சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.இதனால், பூக்கள் விற்பனையில் நஷ்டம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

மேலும், பூக்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இந்நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குளிர்சாதன பெட்டியில் பூக்களை பதுக்கி வைத்திருந்த 5 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், குளிர்சாதன பெட்டியில் வைத்து பூக்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்து பூ விற்ற 5 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: