கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு அளித்துள்ளது. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கு, நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரால், கடந்த 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், ‘கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்’ புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது, ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அந்தவகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்க நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதுமட்டுமல்ல, திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், அதை கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெறலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தகுதியான நபா்களை உறுதி செய்வதற்கென தனிக் குழுவை ஆட்சியா்கள் அமைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா், உதவிப் பொறியாளா் அல்லது ஒன்றியப் பொறியாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றிய மேற்பாா்வையாளா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகியோா் குழுவில் இடம்பெற்றிருப்பா். குடிசை வீடுகளின் பட்டியல் அந்தந்த ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

வீடுகள் அனைத்தும் குறைந்தது 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி ஆா்சிசி கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும். கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் கண்டிப்பாகத் தவிா்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: