பிரேக்கிங் செய்திகளுக்காக தவறான தகவலை வெளியிட்டால் நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரிக்கை

சென்னை: ஒன்றிய அமைச்சராக 2வது முறை பதவியேற்ற பின் நேற்று எல்.முருகன் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 5001 ருத்ராட்சங்கள் அடங்கிய ஆளுயர மாலை அணிவித்து, கும்ப மரியாதை செய்து வரவேற்றனர். தொடர்ந்து, தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு வந்த எல்.முருகனுக்கு மாநில பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செயலாளர்கள் எஸ்.சதீஷ்குமார், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எல்.முருகன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் ஆட்சியில் நமது நாடு வளர்ச்சியடைந்த தேசமாக மாறி வருகிறது. 2047ம் ஆண்டு, நமது தேசம் உலக நாடுகள் வரிசையில் முழு அளவில் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும். அதில் ஒரு பங்காக இருப்பது, எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு அந்த வாய்ப்பை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். அதற்காக தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். நமது நாட்டில் தவறான செய்தி என்பது கொரோனாவை விட மிக வேகமாக பரவுகிறது. பிரேக்கிங் செய்திகளுக்காக அரைகுறையான தகவல்களை கொண்டு செல்ல வேண்டாம். தவறான உறுதியற்ற தகவல்களை பரப்பினால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பிரேக்கிங் செய்திகளுக்காக தவறான தகவலை வெளியிட்டால் நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: