அறிவுரைதான் வழங்கினார்; சும்மா பேசிக்கொண்டிருந்தோம்… தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

சென்னை: தொகுதி, அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அமித்ஷா எனக்கு அறிவுரை வழங்கினார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலன் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த புதன்கிழமை விஜயவாடா அருகே நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனும் கலந்துகொண்டார். விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார். இதையடுத்து தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என பதிவிட்டுள்ளார்.

The post அறிவுரைதான் வழங்கினார்; சும்மா பேசிக்கொண்டிருந்தோம்… தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: