சிவகங்கை அருகே சாலையோர இரும்பு தடுப்புகள் மாயம்

சிவகங்கை, ஜூன் 14: சிவகங்கை அருகே நெடுஞ்சாலை வளைவில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் காணாமல் போனதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை தொடர்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் சாலை யோரங்களில் வாகனங்கள் விபத்தின்றி பாதுகாப்புடனும், கால விரயத்தை தவிர்க்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில், சிவகங்கை இளையான்குடி மாநில நெடுஞ்சாலையில் மல்லல் விலக்கு பகுதிகளில் உள்ள ஆபத்தான வளைவில் 500 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்த சாலையோர இரும்புத்தடுப்புகள் தற்போது மாயமாகி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் இப்பகுதியில் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்து கூறியதாவது: சாலையோரத்தில் அமைந்துள்ள இரும்புத் தடுப்புகளும் அதில் ஒட்டப்பட்டுள்ள ஒளிரும் ஸ்டிக்கர்களும் வாகனங்களுக்கு மிகவும் பயன் அளித்து வந்தது.

ஆனால், தற்போது இந்த தடுப்புகள் காணாமல் போனதால், இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து விதமாக வாகன ஓட்டிகளும் உயிருக்கு பாதுகாப்பின்றி அச்சத்துடன் இந்த வளைவை கடந்து செல்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் வாகனங்கள் இந்த அபாயகரமான சாலை வளைவில் விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த இரும்பு தடுப்பை நெடுஞ்சாலைத் துறையினர் தாமதமின்றி சீரமைக்க வேண்டும் என்றார்.

The post சிவகங்கை அருகே சாலையோர இரும்பு தடுப்புகள் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: