கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகையால் தனியார் மருத்துவமனை மூடல்

கும்மிடிப்பூண்டி, ஜூன் 12: கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர்கள் தனபால் – விஜயா தம்பதி. இவர்களுக்கு கணேஷ், சரவணன் மற்றும் மகேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் மகேஷ் (30) கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வெல்டிங் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்றுமுன்தினம் காலை வேலைக்குச் சென்ற மகேஷ் மாலையில் வீடு திரும்பினார். அப்போது மகேஷுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே, அவரை அருகாமையில் உள்ள ஆல்பா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு மருத்துவர் இல்லாத நிலையில் பணியில் இருந்த செவிலியர் இன்ஜெக்சன் மற்றும் குளுக்கோஸ் மூலமாக சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதில், சிகிச்சை அளித்த 10 நிமிடங்களில் மகேசுக்கு கை மற்றும் கால்கள் இழுக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு மகேஷ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் ஏற்கனவே மகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார் இறந்த மகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி நேற்று காலை மகேஷின் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் சமரசம் செய்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து தனியார் மருத்துவமனை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மகேஷ் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்து முழுமையாக தெரிய வரும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் கூடியிருந்த மகேஷ் உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகையால் தனியார் மருத்துவமனை மூடல் appeared first on Dinakaran.

Related Stories: