திருவாரூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் 1,282 பள்ளிகள் மீண்டும் நாளை திறப்பு

* வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படுகிறது
* வர்ணம் தீட்டும் பணிகளும் மும்முரம்

திருவாரூர், ஜூன் 9: கோடை விடுமுறைக்கு பின் மாவட்டத்தில் 1,282 பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படுகிறது வர்ணம் தீட்டும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக்குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிவதற்கான சிறப்பு செயலி மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடியபயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்க்கு வினாடி-வினா போட்டிகள்,

மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணிதஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத்திட்டம், வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் திட்டம், கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு, மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி திட்டம் என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவியருக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு தவறாமல் வரவழைக்கும் வகையில் காலை சிற்றுண்டி திட்டமும் துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் ஏழை, எளிய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் காலை நேரத்தில் சத்தான உணவு உண்டு வருவதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பெண்கள் தங்களது வாழ்கையில் முன்னேறி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மாணவிகளின் மேற்படிப்பினை ஊக்குவிக்கும் வகையில் புதுமை பெண் திட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே மாணவர்களுக்குரிய பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள், சமையல் கூடம் உள்ளிட்ட அனைத்தையும் தூய்மைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட பள்ளி தலையாசிரியர்களுக்கு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 945, அரசு உதவி பெறும் பள்ளிகள் 125, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 134, சிபிஎஸ்இ பள்ளிகள் 6 மற்றும் நர்சரி பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என மொத்தம் ஆயிரத்து 282 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளிகள் அனைத்திலும் தற்போது தூய்மைபடுத்தும் பணி மற்றும் வர்ணம் தீட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

The post திருவாரூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் 1,282 பள்ளிகள் மீண்டும் நாளை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: