நீட் முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? : பிரியங்கா காந்தி

டெல்லி : நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான நீட் நழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-இளநிலை 2024) முடிவுகளை ஜூன் 4ம் தேதி வெளியிட்டது. அதில், தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

இந்த நிலையில், நீட் நுழைவு தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தேகிக்கின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாலும் குழப்பம் நிலவுகிறது. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பிரியங்கா காந்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,”நாடு முழுவதும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது. முதலில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது; பிறகு தேர்வு முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றது பற்றி மாணவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். நீட் தேர்வு முடிவுக்கு பிறகு நாடு முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. நீட் முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்?. மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்,”இவ்வாறுத் தெரிவித்தார்.

The post நீட் முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? : பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Related Stories: