லோக்ஆயுக்தா திடீர் சோதனை கர்நாடக அரசு அதிகாரிகள் வீடுகளில் ரூ.18.2 கோடி பணம், நகை பறிமுதல்

பெங்களூரு: மாநிலம் முழுவதும் 4 அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இதில் வருமானத்திற்கும் அதிகம் சேர்த்த சொத்து, நகை, பணம் மொத்த மதிப்பு ரூ.18.2 கோடி பறிமுதல் செய்தனர். அரசு துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக லோக்ஆயுக்தாவுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று அதிகாலை தார்வார், ஷிவமொக்கா மற்றும் விஜயநகர் மாவட்டங்களில் 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். தார்வார் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர பிஜாபுராவுக்கு சொந்தமான வீடு உள்பட மூன்று இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது வீட்டில் ரொக்க பணம், தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள், வங்கி கணக்கு புத்தகம், அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் உள்பட பலவற்றை பறிமுதல் செய்தனர். ஷிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய நிர்வாக செயலதிகாரி ரூப்ளா நாயக் மற்றும் செயற்பொறியாளர் ஷியாம் ஆகியோர் அலுவலகத்தில் ஷிவமொக்கா மாவட்ட லோக்ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் மஞ்சுநாத் சவுத்திரி சோதனை நடத்தினார். விஜயநகர் மாவட்ட சுகாதார தலைமை அதிகாரி சங்கர் நாயக்கிற்கு சொந்தமான வீடு, அப்பார்ட்மென்ட், உறவினர்கள் வீடு, அலுவலங்கள், நண்பர்கள் வீடுகளில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். 4 அதிகாரிகள் வீடு, அலுவலகத்தில் இருந்து ரூ.18.2 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: