திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை திடீரென சந்தித்து பேசினார். அப்போது இந்த வழக்கில் மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு படப்பிடிப்புக்காக காரில் செல்லும் வழியில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்த பல்சர் சுனில்குமார், மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நடிகர் திலீப் மீது பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது மற்றும் ஆவணங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி இந்த வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட முதல் 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது. சதித்திட்டத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். எர்ணாகுளம் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குற்றவாளிகளுக்கு மிகவும் குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்பட்டுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறினார். இதற்கிடையே இந்த தீர்ப்பில் தனக்கு எந்த அதிசயமும் ஏற்படவில்லை என்றும், தனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில தங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்த நடிகை நேற்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை திடீரென சந்தித்து பேசினார். சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்தார். கேரள மக்கள் முழுவதும் உங்களுடன் இருக்கின்றனர். எனவே இந்த வழக்கில் கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகையிடம் உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
