மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா: மெஸ்ஸி நிகழ்ச்சியில் வன்முறை எதிரொலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் ஏற்பட்ட வன்முறைகள் எதிரொலியாக விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா செய்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி கடந்த 13ம் தேதி இந்தியா வந்திருந்தார். மேற்கு வங்கத்தில் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களை காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரசிகர்கள் கூட்டம் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட்டுக்களை வாங்கியிருந்த ரசிகர்கள் அதிருப்தியில் வன்முறையில் ஈடுபட்டனர்.

இது குறித்த விசாரணை நடத்துவதற்கு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தனது பேஸ்புக் பதிவில், அமைச்சர் கோஷ் எழுதிய ராஜினாமா கடிதத்தின் நகலை பகிர்ந்துள்ளார். அதில் அமைச்சர் கோஷ் தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

மேலும் குணால் கோஷ் கூறுகையில்,‘‘பிஸ்வாஸின் ராஜினாமா கடிதம் முதல்வரால் ஏற்கப்பட்டுவிட்டது. மேலும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை பொறுப்பை முதல்வர் மம்தா பானர்ஜி கவனித்துக்கொள்வார். மின்சாரத்துறை பொறுப்பில் பிஸ்வாஸ் நீடிப்பார்” என்று தெரிவித்துள்ளார். மெஸ்ஸி நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக 24மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி டிஜிபி மற்றும் பிற அதிகாரிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் பிதான்நகர் துணை காவல் ஆணையர் அனீஷ் சர்க்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: