வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பட்டியல் வெளியாகிறது

புதுடெல்லி: மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு பெற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த 3 மாநிலங்களில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாளை மறுநாள் தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர், கோவா, குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபர், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா மாநிலத்திலும், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த பணிகள் கடந்த 11ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து மாநிலத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த பட்டியலில் , இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரி மாறிச் சென்றவர்கள் எனப் பல்வேறு காரணங்களுக்காகச் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீக்கத்துக்கு பின் மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் 7,08,16,631 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு தீவிர திருத்தத்துக்கு , முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்த எண்ணிக்கையான 7,66,37,529 விட 58,20,898 வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வரைவு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர்கள், வாக்குச்சாவடி வாரியான விரிவான விவரம், நீக்கத்திற்கான காரணங்களுடன் மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி இணையதளம், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் இணையதளம் மற்றும் இசிஐஎன்இடி செயலி ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கான விசாரணை செயல்முறை சுமார் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஒரு தனி இணையதளத்தில் கிடைக்கின்றது. இதன் மூலமாக வாக்காளர்கள் தங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பதையும் எந்த பிரிவின் கீழ் நீக்கப்பட்டுள்ளது என்பதையும் சரிபார்க்கலாம். இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 16ம் தேதி(நேற்று) முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்தில் படிவம் 6 உடன் உறுதிமொழிப்படிவம் மற்றும் துணை ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

மேற்கு வங்கத்திற்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையானர் சுப்ரதா குப்தா, ‘வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லாதவர்கள் பீதியடைய வேண்டாம். 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் விவரங்கள் பொருந்தாதா சுமார் 30லட்சம் வாக்காளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு ஆவணங்களை சமர்ப்பித்து தகுதியை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும்’ என்றார்.
ராஜஸ்தான்: ராஜஸ்தானிலும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த பட்டியலில் மொத்தமுள்ள 5.46 கோடி வாக்காளர்களில் 41.85லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை பெற முடியவில்லை என்று தேர்தல் அதிகாரி நவீன் மகாஜன் தெரிவித்துள்ளார். இவர்களில் 24.80லட்சம் வாக்காளர்கள்(5.43%) நிரந்தரமாக இடம்பெயர்ந்ததாக கண்டறியப்பட்ட பின் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 4.57லட்சம் பெயர்கள் சரிபார்ப்பின்போது இல்லாததால் நீக்கப்பட்டுள்ளனர். 8.75லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 3.44 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 27,048 வாக்காளர்கள் கண்டுபிடிக்க முடியாமல் போனது உட்பட பிற காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 11லட்சம் வாக்காளர்களுக்கு அவர்களது தகுதியை உறுதிப்படுத்துவதற்கான ஆவண சரிபார்ப்பு கோரி நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் நீக்கம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவா: கோவாவில் கடந்த வாக்காளர் பட்டியலில் மொத்த எண்ணிக்கையானது 11,85,034 ஆக இருந்த நிலையில் தற்போது 10,84,992 வாக்காளர்கள் மட்டுமே தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். சுமார் 1,00,042 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25,574 பேர் இறந்துவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளனர். 72471 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது சரிபார்ப்பின்போது கண்டறியப்படவில்லை. மேலும் 1997 பேரின் பெயர்கள் இரண்டு முறை இடம்பெற்றுள்ளதால் நீக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவு: லட்சத்தீவில் மொத்தமுள்ள 57813 பேரில், சிறப்பு தீவிர திருத்தப்பணியின்போது 56384 பேர் தங்களது கணக்கெடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதில் 1429 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
1 கோடி பேர் நீக்கம்: இதன் அடிப்படையில் பார்க்கும் போது மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட வாக்காளர்கள் மறுவிண்ணப்பம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: தமிழகத்தில் நாளை மறுநாள் (19ம் தேதி) சிறப்பு தீவிர திருத்ததுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிக அதிகபட்சமாக சுமார் 1 கோடி வரை வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற தகவல் வௌியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 1 லட்சம் பேர் நீக்கம்
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு (எஸ்ஐஆர்) முன்னதாக இருந்த 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில், தற்போது 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் கணக்கெடுப்புப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி, புதுச்சேரி மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 1,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது, இதற்கு முன்பு இருந்த வாக்காளர்களின் அடிப்படையில் 10 சதவீதமாகும்.

இறப்பு காரணமாக 20,798 பேரும் (2 சதவீதம்), குடிபெயர்ந்தோர் மற்றும் அவ்விடத்தில் வசிக்காதோர் என 80 ஆயிரத்து 645 பேரும் (8 சதவீதம்), பட்டியலில் இரண்டு முறை இடம்பெற்ற 2,024 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு ஆவணத்தை சமர்ப்பிக்க முடியாத 71 ஆயிரத்து 428 பேருக்கு நோட்டீஸ் அனுப்புவோம். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து உறுதி செய்யலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்குமாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் 962 வாக்குச் சாவடிகளில் இருந்து 137 கூடுதலாகி, தற்போது 1,099 வாக்குச் சாவடிகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேற்குவங்க பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் யார், யார்?
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தத்தில் 58,20,898 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
இறந்தவர்கள் : 24,16,852
நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள்: 19,88,076
முகவரியில் இல்லாதவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 12,20,038
இரட்டைப்பதிவு கொண்டவர்கள்: 1,38,000
போலி வாக்காளர்கள்: 1,83,328
பிற சிக்கல்களின் கீழ் நீக்கப்பட்டவர்கள்: 57,000

Related Stories: