தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு: காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்ததாரர் கைது

 

தஞ்சாவூர், ஜூன் 7: தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு பரப்பிய காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2ம் தேதி மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஒரு புகார் மனு அளித்தார். அதில், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றியபோது நகராட்சி ஒப்பந்ததாரர் சுடர்மணி என்பவர் விதிமுறைகளை மீறி பணி செய்யாமல் இருந்ததால் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.

இதற்கிடையே நான் பணி மாற்றலாகி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக தற்போது பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில் ஒப்பந்ததாரர் சுடர்மணி உள்நோக்கத்துடன் என்னை பற்றி பாலியல் ரீதியாக இழிவுப்படுத்தி ஆடியோ, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார்.

எனவே அவர் மீதும், இவருக்கு உடந்தையாக இருந்த மன்னார்குடியை சேர்ந்த பாலு என்பவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார், தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சுடர்மணியை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்து தஞ்சாவூர் அழைத்து வந்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு: காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்ததாரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: