கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி பதவி ஏற்பதில் தாமதம்: அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்; முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு நிதிஷ்குமார் கடும் நெருக்கடி

புதுடெல்லி: நிதிஷ், சந்திரபாபுநாயுடு ஆகியோரின் கோரிக்கையால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பிரதமராக மோடி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், ஒன்றிய அமைச்சரவையில் முக்கிய இலாகாகளை தர வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் குடைச்சல் கொடுப்பது தொடர்பாக ஜேபி நட்டா, அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை நடத்தினார்கள். 18வது மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பெரும்பான்மை பெற 272 எம்பிக்கள் பெற வேண்டும். ஆனால் 2014, 2019ல் பெரும்பான்மை பெற்ற பா.ஜ இந்த முறை அதிகபட்சமாக 240 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றது. ஆனால் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 எம்பிக்கள் உள்ளதால் கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சிகளின் கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முறைப்படி எம்பிக்கள் குழு தலைவராக, அதாவது புதிய பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட உள்ளார்.

அதன்பின்னர் ஆதரவு எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து புதியதாக ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருவார். அதை ஏற்று ஜனாதிபதி முர்மு, புதிய ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுப்பார். புதிய ஆட்சி அமைக்க கூடிய பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் சூழலில் இன்னொரு பக்கம் மோடி ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ள தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் முக்கிய இலாகாக்களை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை மோடி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதை அறிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அமராவதியில் உருவாகும் தலைநகரின் கட்டுமான பணிகளுக்கு ஒன்றிய அரசு முழு நிதி உதவி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மோடிக்கு முன்வைத்துள்ளார். அக்னிவீரர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நிதிஷ்குமாரும், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர். இந்த உத்தரவாதம் மற்றும் கேட்ட முக்கிய இலாகாக்களை தருவதாக பதவி ஏற்கும் முன்பு உறுதி அளிக்க வேண்டும் என்று நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இதனால் பதவி ஏற்கும் முன்பே மோடிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நேற்று பா.ஜ மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தினார்கள். தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த பா.ஜ தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டாலும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் ஆகியோரின் கோரிக்கை மற்றும் நெருக்கடி குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பா.ஜ சார்பில் புதிய அரசில் பதவி ஏற்கும் அமைச்சர்கள், நிதிஷ், சந்திரபாபுநாயுடு ஆகியோருக்கு ஒதுக்க வேண்டிய இலாகாக்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. எனவே நிதிஷ், சந்திரபாபுநாயுடு ஆகியோரை சமரசப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளை மறுநாள் 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த பிரச்னைகள் தீர்க்கப்படாததால் பதவி ஏற்பு விழா தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழா குறித்து உறுதியான தகவல் எதுவும் பா.ஜ தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இன்று நடக்கும் எம்பிக்கள் கூட்டம் முடிந்த பிறகுதான் பிரதமராக மோடி எப்போது பதவி ஏற்பார் என்பது தெரியும் என்று பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மோடி பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மோடி பதவி ஏற்பில் வெளிநாட்டு தலைவர்கள்
3வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பூட்டான், நேபாளம், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.அவர்களுக்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி என்று பதவி ஏற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர் 9ம் தேதி பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 6 அமைச்சர்கள் வேண்டும் தெலுங்குதேசம் அறிவிப்பு
தெலுங்குதேசம் கட்சியும் ஒன்றிய அமைச்சரவையில் 6 இடங்கள் கேட்டு கடிதம் எழுதி உள்ளது. நிதித்துறை, நீர்வளம், சாலை போக்குவரத்து, விமானப்போக்குவரத்து, சுகாதாரம், கல்வி அமைச்சகம் உள்ளிட்டவற்றை கேட்டு பா.ஜ தலைமைக்கு தெலுங்குதேசம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* உபி முதல்வர் யோகி பதவியை பறிக்க திட்டம்?
மக்களவை தேர்தலில் 80 தொகுதிகள் கொண்ட உபி, 48 தொகுதிகள் கொண்ட மகாராஷ்ராவில் பா.ஜ கடும் தோல்வியை சந்தித்தது. உபியில் பா.ஜ 33 இடங்களை மட்டுமே பிடித்தது. மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணிக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால்தான் பா.ஜவுக்கு மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற கோபம் பா.ஜ மேல்மட்ட தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாகவும், பா.ஜவில் கட்சிப்பணி செய்யப்போவதாகவும் பட்நவிஸ் அறிவித்தார். இதே போல் உபியில் பா.ஜ தோல்விக்கு குறிவைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியை பறிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3வது முறையாக மோடி பிரதமர் பதவி ஏற்ற பிறகு யோகி உபி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

* 3 அமைச்சர் பதவி வேண்டும்: நிதிஷ்குமார் கட்சி பிடிவாதம்
ஒன்றிய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 3 அமைச்சர் பதவி வேண்டும் என்று டெல்லியில் மூத்த தலைவர் கேசி தியாகி தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ 12 எம்.பி.க்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பிறகு ஐக்கிய ஜனதாதளம் இரண்டாவது பெரிய கூட்டணியாக உள்ளது. எனவே நாங்கள் இப்போது மூன்று அமைச்சரவை பதவிகள் வரை பார்க்கிறோம்.ஒன்றிய அமைச்சர்கள் குழுவில் மரியாதைக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று நம்புகிறோம். பிரதமர் மோடியும் எங்கள் கட்சித் தலைவர் நிதிஷ் குமாரும் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து முடிவு செய்வார்கள். ஆனால் து மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். 2025 பீகார் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். ரயில்வே, கிராமப்புற மேம்பாடு, விவசாயம், நீர்வளம் மற்றும் கனரகத் தொழில்கள் போன்ற துறைகளில் மூன்றை ஒதுக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவகாரத்தை தொடர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* நிபந்தனையற்ற ஆதரவு: சிராக் பஸ்வான் பேட்டி
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக சிராக் பஸ்வான் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ நாங்கள் பிரதமருக்கும் அவரது தலைமையிலானஅரசுக்கும் எங்கள் ஆதரவை வழங்கினோம். எந்த நிபந்தனையும் இல்லாமல் அவரது தலைமையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொண்டோம். பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எந்த நிபந்தனையும் இருக்க முடியாது. இது பிரதமர் தலைமைக்கு கிடைத்த வெற்றி. அவரால் தான் பா.ஜ கூட்டணி வென்றது’ என்றார்.

The post கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி பதவி ஏற்பதில் தாமதம்: அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்; முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு நிதிஷ்குமார் கடும் நெருக்கடி appeared first on Dinakaran.

Related Stories: