ஓபிஎஸ் அணியில் இருந்து கு.ப.கிருஷ்ணன் விலகல்; பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி: ஓபிஎஸ் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விலகியுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். இவர் இன்று திருச்சியில் அளித்த பேட்டி: 1975ம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டபோது சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்ஜிஆர் தீர்வு கண்டார். இப்போது அதேபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதாவே இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தார்.

பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டதில் எனக்கு துளி அளவுகூட விருப்பமில்லை. அவரது செயல்பாடுகளை அறிந்து அவரை விட்டு நான் பிரிந்து 3 மாதங்களாகிறது. இனிமேல் ஓபிஎஸ்சால் எதுவும் செய்ய முடியாது. அவரால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சியல்ல. ஏழை, எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டு கொண்டிருப்பதை தவிர அதிமுக இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார். டிடிவி. தினகரன் தனிக்கட்சி துவங்கி சென்று விட்டார். அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச முடியும். இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

The post ஓபிஎஸ் அணியில் இருந்து கு.ப.கிருஷ்ணன் விலகல்; பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: