துறவி அல்ல என்பதை அறிந்து தான் வள்ளுவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து அரசு படமாக அங்கீகரித்தவர் கலைஞர்: ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேச்சு

சென்னை: திருவள்ளுவர் துறவி அல்ல என்பதை அறிந்தே, அவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து அரசின் அங்கீகரிக்கப்பட்ட படமாக அறிவித்தவர் கலைஞர் என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் கூறினார். சென்னை புரசைவாக்கம் ஒய்எம்சிஏ அரங்கத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் காலம் உள்ளவரை கலைஞர், தமிழ்த்தாய் தந்த தமிழ்மகன், சான்றோர் போற்றும் தலைமகன் என்கிற தலைப்பில் நேற்று முன்தினம் இரவு கூட்டம் நடைபெற்றது.

எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகள், சிவஞான பாலய சுவாமிகள், ராமானந்த குமரகுரு சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினர். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, எழும்பூர் பகுதி செயலாளர் சோ.வேலு உட்பட மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசியதாவது: 60 ஆண்டுகால அரசியலை தன்னைச் சுற்றி சுழல விட்ட மனிதர், மாபெரும் சரித்திர சாதனையாளர், பிறந்தபோதே தலைமைப் பண்பு இயற்கையாக அமையப் பெற்றவர் கலைஞர். பலரும் கையில் பேப்பர் வைத்து படித்து வந்த வேளையில் கலைஞர், தனது கருத்துகளை கையில் பேப்பர் இல்லாமலே சொற்பொழிவாற்றி, பிறர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து சொற்பொழிவு ஆற்றக்கூடிய தன்மை கொண்டவர். அதேபோல் தமிழ்ப் புலமையில் தனது நகைச்சுவை திறமையால் சட்டப்பேரவையில் சிரிப்பு ஒலியை அடிக்கடி எழுப்பச் செய்தவர். தனது மகன் மிசாவில் சிறையில் இருக்கும்போது கூட எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல் தனது கொள்கையில் உறுதியாக நின்றார்.

இந்தியா எப்போதும் எதை நினைக்கிறதோ அதற்கு மாறாகத்தான் தமிழகம் செயல்படும். ஏனெனில் எதிலும் தமிழன் வித்தியாசமானவன், பகுத்தறிவும், சுய சிந்தனையும் கொண்டவன் என்பதால். கலைஞர் ஒவ்வொரு மாவட்டத்திலும் வலிமை நிறைந்த தலைமையை உருவாக்கினார். இந்த இயக்கம் இன்றளவும் நீடித்திருக்க காரணம் கலைஞர் உருவாக்கிய வலிமையான தலைமையே ஆகும். அன்றைய காலகட்டத்தில் எல்லா நிகழ்வுகளிலும் தேசிய கீதமே ஒலிக்கப்பட்டு வந்தது. முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்றை கொண்டு வந்தார். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்து பல செயல்பாடுகளை முன்னெடுத்தவர் கலைஞர்.

திருவள்ளுவருக்கு வெள்ளை ஆடை அணிவித்ததன் காரணம், அவர் குடும்பஸ்தர் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நீங்கள் யாரைக் கேட்டு காவி உடையாக மாற்றினீர்கள். திருவள்ளுவர் ஒன்றும் துறவி கிடையாது. காமத்துப்பாலை பாடியவர் பல அதிகாரங்களில் பாடியவர் திருவள்ளுவர். அவரை எப்படி துறவியாக மாற்ற இயலும். அவர் ஒரு குடும்பஸ்தர் என்னும் விவரம் அறிந்த முத்தமிழறிஞர் கலைஞர், அவருக்கு வெள்ளை உடை அணிவித்து அதனை அரசின் அங்கீரிக்கப்பட்ட புகைப்படமாக அறிவித்தார். காவி உடையை நான் நன்கு மதிக்கிறேன். ஆனால் அது திருவள்ளுவருக்கு பொருந்தாது. இவ்வாறு பேசினார்.

The post துறவி அல்ல என்பதை அறிந்து தான் வள்ளுவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து அரசு படமாக அங்கீகரித்தவர் கலைஞர்: ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: