மதி அங்காடியின் விழாக்கால விற்பனை கண்காட்சி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை செய்யப்படும் மதி அங்காடியின் விழாக்கால விற்பனை கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள், மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி அங்காடி, மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் விற்பனைக் கண்காட்சிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு சந்தைகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதன் வாயிலாக சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சியானது இன்று முதல் 4ம் தேதி வரை நடைபெறும் மதி கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, மூலிகைப் பொருட்கள், சிறுதானிய பொருட்கள், சிப்ஸ் வகைகள், வெட்டிவேர் பொருட்கள், மண்பாண்டங்கள், மரச்செக்கு எண்ணை வகைகள், மரச் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்திட 46 அரங்குகளும், கிராமிய பாரம்பரியமும், சுவையும் நிறைந்த உணவு வகைகளை விற்பனை செய்திட 5 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் வார இறுதி நாட்களில் கலை நிகழ்ச்சிகள், இலவச வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இத்தகைய சிறப்புமிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மாநில அளவிலான மாபெரும் மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும்.

Related Stories: