இஸ்ரேலை கண்டித்து தேனியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 4: தேனியில் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அண்ணாமலை கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பாலஸ்தீனத்தில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதலைக் கண்டித்தும், பாலஸ்தீனத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், முருகன், ராமச்சந்திரன், முனீஸ்வரன், ராஜப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கரசுப்பு, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், இடைக்கமிட்டி செயலாளர்கள் லெனின், ஆறுமுகம், செல்வம், போஸ், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இஸ்ரேலை கண்டித்து தேனியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: