தாழவேடு, ராமஞ்சேரியில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

 

திருவள்ளூர்: திருத்தணி, பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி பகுதிகளில் உள்ள திரவுபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. திருத்தணி: திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை ஒட்டி கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண மின் வளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது‌.

தினமும் அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு கிராம திருவீதியுலா நடைபெற்றது. இந்த திருவிழாவில் இறுதி நாளான நேற்றுமுன்தினம் மாலை தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள் 800க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதமிருந்தனர். அன்று மாலை 6 மணி அளவில் பக்தர்கள் ஊர்வலமாக திரவுபதி அம்மன் கோயில் வந்தடைந்தனர். சிறப்பு மலர் அலங்காரத்தில் அக்னி குண்டம் எதிரில் திரவுபதி அம்மன் எழுந்தருள அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூங்கரகம் முதலில் அக்னி குண்டத்தில் இறங்க காப்பு கட்டிய பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மேலும், தீமிதி திருவிழாவில் தாழவேடு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் சார்பில் தீமிதி திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம், ராமஞ்சேரியில் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மூன்றாவது தலைமுறையாக தீமிதி திருவிழா கொண்டாடப்பட்டது.

110 வது ஆண்டாக நடைபெறும் இந்த தீமிதி திருவிழா கடந்த மே மாதம் 24ம் தேதி கொடியைற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்கள் ஆராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் 350 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.  இந்த தீமிதி திருவிழாவில் சென்னை, திருவள்ளூர், ராமஞ்சேரி, தோமூர், புதூர், பட்டறை பெருமந்தூர், காஞ்சிப்பாடி, மேட்டுப்பாளையம், கூளூர், திருவாலங்காடு, கணக்கம்மசத்திரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனை வழிபட்டு சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post தாழவேடு, ராமஞ்சேரியில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: